மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல அதிகாரிகளுடன் சேர்த்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
இந்த நடவடிக்கைகள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோருக்கும் பொருந்தும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு தனி அறிக்கையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது பல அமைச்சர்கள் உட்பட 313 கனேடியர்கள் மீது தண்டனை நடவடிக்கைகளை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவ படையெடுப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு தடை விதித்தது, அதே நேரத்தில் கடுமையான பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டது.
ரஷ்ய நடவடிக்கைகளின் சரியான தன்மையை மாஸ்கோ குறிப்பிடவில்லை, இது “தனிப்பட்ட தடைகள்” மற்றும் “நிறுத்தப்பட்டியல்” என்று அழைக்கிறது, அவை “பரஸ்பர கொள்கையின்” அடிப்படையில் இருக்கும் என்றும் கூறுகிறது.
அமெரிக்க கூட்டுப் பணியாளர்களின் தலைவர் மார்க் மில்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், மத்திய புலனாய்வு முகமை இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி ஆகியோரும் ரஷ்ய பட்டியலில் உள்ளனர்.
துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி தலைவர் சமந்தா பவர், துணை கருவூல செயலாளர் அடேவாலே அடியேமோ மற்றும் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் தலைவர் ரீட்டா ஜோ லூயிஸ் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.
ஜோ பைடனின் மகன் ஹண்டர் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கும் ரஷ்யா நுழைவதற்கு தடை விதித்தது.
அமெரிக்க அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள், வணிகர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்களுக்கு எதிராக மாஸ்கோ விரைவில் கூடுதல் தடைகளை அறிவிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் எச்சரித்தது.