தனுஷ் படத்தை திரையிட மறுத்தாங்க; அப்புறம் வந்து கெஞ்சினாங்க – கஸ்தூரி ராஜா சொன்ன அறிவுரை

‘துள்ளுவதோ இளமை’ படத்தை பார்த்து தனுஷை இகழ்ந்த முன்னணி வினியோகஸ்தர் ஒருவர், இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் படத்தை வாங்கிக் கொடுக்குமாறு கெஞ்சினார் என கஸ்தூரிராஜா கூறியுள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் அவர் மகன் விஜித் பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் கஸ்தூரி ராஜா மற்றும் வெற்றி மாறன் ஆகியோர் கலந்துகொண்டு நடிகர் விஜித்தை அறிமுகப்படுத்தினர்.

அப்போது பேசிய கஸ்தூரி ராஜா தன்னுடைய மகன் தனுஷை  ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகப்படுத்தியபோது நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்தார். ”அந்தப் படத்தை வாங்க சிலர் மறுத்தனர். ஒரு கட்டத்தில்  வினியோகஸ்தர் ஒருவர் அவருடைய மகனுடன் படத்தை பார்த்தார். அதன் பின் மகன் படத்தை வாங்க வேண்டும் என்றார். ஆனால் வினியோகஸ்தர் வாங்கக் கூடாது என்று ஒற்றை காலில் நின்றார். என் அலுவலகத்தில் ஆரம்பித்த சண்டை பாண்டி பஜார் வரை நீண்டது.

இறுதியில் அவரின் மகன் துள்ளுவதோ இளமை படத்தை வாங்கி வெளியிட்டார். ஆனால் ஒரு ஏரியாவில் மட்டும் படம் விற்கவில்லை. எனவே, ஒரு முன்னணி வினியோகஸ்தரை அழைத்து அந்த ஏரியாவுக்காக படத்தை திரையிட்டேன். ஆனால் படம் முடிந்த பிறகு மற்ற அனைவரும் இருந்தனர். யாருக்காக திரையிட்டேனோ அவர் மட்டும் இல்லை. தொலைபேசியில் அழைத்து பேசியபோது “நம் மகன் நமக்கு அழகாக தெரிவான். ஆனால் பணம் கொடுத்து படம் பார்ப்பவர்களுக்கு தெரியமாட்டான்” எனக் கூறினார்.

image

இந்த சம்பவம் நடந்த இரண்டே ஆண்டுகளில் பையன் படத்தை வாங்கிக் கொடுங்கள் என என்னிடம் அந்த வினியோகஸ்தர் வந்து கெஞ்சினார். அதுபோன்ற விமர்சனங்கள் விஜித்திற்கு வரும். அந்த விமர்சனங்களை சந்திக்க வேண்டும். ஏற்றுக்கொள்ள வேண்டும். நிச்சயம் வெற்றிக் கிடைக்கும்” என்று தனுஷின் வெற்றியை குறிப்பிட்டு விஜித்திற்கு அறிவுரை கூறினார் கஸ்தூரி ராஜா.

இதையும் படிக்க: அஜித்தின் 62-ஆவது படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.