‘லத்தி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்காப்பு நடவடிக்கைளுடன் எடுக்கப்பட்டு வருவதாக நடிகர் விஷால், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
‘வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஏ. வினோத் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு, கடந்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில், நடிகர் விஷாலுக்கு கை மற்றும் விரல்களில் ஹேர்லைன் பிராக்சர் எனப்படும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனால், உடனடியாக படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்புகளில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக, நடிகர் விஷால் கேரளா சென்றார். பின்னர் முழுமையாக குணமடைந்ததையடுத்து, ‘லத்தி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் விஷால், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள், ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் உதவியுடன், உயர்கட்ட தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரபு, சுனைனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர்கள் நந்தா, ரமணாவின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். எம்.பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
Precautions taken at a higher level by @peterheinoffl master while filming the elaborated climax sequence of #Laththi.#FinalSchedule #Stuntman #V32 #LaththiCharge@_RanaProduction @nandaa_actor @actorramanaa @dir_vinothkumar @TheSunainaa @DOP_bala @HariKr_official pic.twitter.com/XihO0ZT4Vp
— Vishal (@VishalKOfficial) March 15, 2022