புதுடில்லி: இந்தியா 3.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்தது. இதனால், பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ராஜ்யசபாவில், ‛வெனிசுலா, ஈரான் நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்குவதாக கூறியுள்ளது’ எனத் தெரிவித்தார்.
அதன்படி, ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் 35 லட்சம் பீப்பாய்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு வழங்குவதற்கான கப்பல் மற்றும் காப்பீட்டை ரஷ்யா கவனித்து கொள்ளும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், பழைய நட்பு நாடான ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்கான கதவுகளை இந்தியா திறந்து வைத்திருப்பதாக கருதப்படும். இன்னும் ஒருசில நாட்களில் ஒப்பந்தம் இடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement