துல்கர் படங்களை புறக்கணிக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
துல்கர் சல்மான் நடித்த படங்கள் தற்போது அடுத்தடுத்து சீரான இடைவெளியில் வெளியாகி வருகின்றன. தியேட்டரில் தான் தனது படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என காத்திருந்து கடந்த நவம்பரில் மலையாளத்தில் தான் நடித்த குரூப் படத்தை ரிலீஸ் செய்தார் துல்கர் சல்மான். அதேபோல தமிழில் சமீபத்தில் அவர் நடித்த ஹே சினாமிகா படமும் தியேட்டர்களில் தான் வெளியானது.
இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்துள்ள சல்யூட் திரைப்படம் வரும் மார்ச் 18ஆம் தேதி நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 36 வயதினிலே மற்றும் மும்பை போலீஸ் புகழ் டைரக்டர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால் துல்கர் சல்மானின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இனி அவரது படங்களை தியேட்டரில் திரையிடாமல் புறக்கணிக்க போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கமும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மூன்றாவது அலை உருவாவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும், இந்த படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார் துல்கர் சல்மான். ஆனால் இதற்காக ஏற்கனவே தியேட்டர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தம் அப்படியே இருக்க, தற்போது நிலைமையும் சீராக இருக்கும் சூழலில் தங்களிடம் முறைப்படி அறிவிக்காமல் தன்னிச்சையாக இந்த செயலை துல்கர் சல்மான் செய்துள்ளதால் தற்போது அவரது படங்களை புறக்கணிக்கும் முடிவை இவர்கள் எடுத்துள்ளனர்.
இத்தனைக்கும் கடந்த நவம்பரில் தியேட்டரில் வெளியான குரூப் திரைப்படமும் துல்கர் சல்மான் சொந்த தயாரிப்பில் வெளியான படம்தான்.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபமும் சம்பாதித்து கொடுத்தது. அதேபோல தற்போது வெளியாக இருக்கும் சல்யூட் படத்தையும் துல்கர் சல்மான் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது