விருதுநகர்: அகழாய்வு மூலம் கிடைக்கும் பொருட்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்கோட்டையில் அகழாய்வுப் பணிகள் இன்று தொடங்கின. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், ”விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் உச்சிமேடு என்ற பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வில் காலவாரியாக தொடர்ச்சியாக நிலவிய நிலவியல் உருவாக்கத்தின் பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான நுண்கற்கருவிகள் சேகரிக்கப்பட உள்ளன.
இப்பகுதியில் சமதளத்திலிருந்து சுமார் 2 மீட்டர் உயரம் கொண்ட இந்த தொல்லியல் மேட்டில் இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் நுண்கற்காலக் கருவிகள் மற்றும் பல பல வகையான பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்களி, மணிகள் மற்றும் சங்காலான வளையல்கள் மற்றும் விரல் மோதிரங்கள் மற்றும் சில்லு வட்டுகள் மற்றும் இரும்பு உருக்கு உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.
மேலும், இத்தொல்லியல் மேட்டில் மேலும் சுடுமண்ணாலான உறைகிணறு மற்றும் குழாய்கள் மேற்பரப்பில் காணப்பட்டதோடு, முழுமையான மற்றும் முழுமைபெறாத சங்கு வளையல்கள் மிக அதிகமாக இந்த தொல்லியல் மேட்டில் கிடைத்துள்ளன. இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் காலத்தை உரிய அறிவியல் பகுப்பாய்வு செய்து அதன் காலத்தைத்தையும் தொன்மையையும் அறிவதே இந்த அகழ்வாய்வின் நோக்கம்” என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும், ”அகழாய்வுப் பணிக்காக தமிழக முதல்வர் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆய்வு மூலம் வைப்பாறு கரையோரத்தில் சங்க காலத்திற்கு முற்பட்ட வரலாற்றை நம்மால் அறிய முடியும். இங்கு நிறைய நுண்கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கரிம பகுப்பாய்வு மூலம் இங்கு கிடைக்கும் பொருட்களின் தன்மையை அறியமுடியும். எனவே அகழாய்வு மூலம் கிடைக்கும் பொருட்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியம், சிவகாசி சார் ஆட்சியர் பிருதிவிராஜ், தொல்லியல் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.