நடந்து முடிந்த உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களை மட்டுமே வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக தங்கள் கட்சி தான் வெற்றி பெறும் என சொல்லி சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர், பாஜக ஆதரவாளரிடம் பந்தயம் போட்டுள்ளார்.
தங்கள் கட்சி தேர்தலில் தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக சொல்லியுள்ளார் சமாஜ்வாதி ஆதரவாளர். அதே போல பாஜக ஆதரவாளர் தனது டெம்போவை பந்தயம் கட்டியுள்ளார். கடந்த வாரம் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மீண்டும் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியானது.
“தேர்தல் முடிவுகள் வெளியானதும் நான் சொன்னது போல எனது பைக்கை பந்தயத்தில் வென்றவரிடம் கொடுத்துவிட்டேன். பிறகு எங்கள் தலைவர் அகிலேஷ் யாதவ் எனக்கு போன் செய்தார். மிகவும் மரியாதையுடன் என்னிடம் பேசிய அவர் செயின் ஒன்றை பரிசாக தந்தார். மேலும் இது போல இனி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம் என சொன்னார்” என பைக்கை இழந்த அவதேஷ் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் பஞ்சாப் நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: ANISource : WWW.PUTHIYATHALAIMURAI.COM