பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் முதலமைச்சராகிறார். நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவரது பின்னணி குறித்து தெரிந்துகொள்வோம்.
48 வயதாகும் பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் என்ற கிராமத்தில் பிறந்தார். பஞ்சாப் மக்கள் மத்தியில் ஓர் அரசியல்வாதி என்பதைவிட நகைச்சுவை நடிகராகவே அறியப்படுகிறார், பகவந்த் மான். கல்லூரியில் பயிலும்போதே ஸ்டாண்ட் அப் நகைச்சுவை நடிகராக தன்னை உயர்த்திக்கொண்டதால், தொலைக்காட்சி நிகழ்ச்சி வாய்ப்புகள் அவரைத்தேடி வந்தன. பகவந்த் மானின் தனிச்சிறப்பு அரசியல் நையாண்டி ஆகும். பஞ்சாப் மற்றும் தேசிய அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக மாற்றி மக்கள் முன் நடித்துக் காட்டி கவர்வதில் வல்லவர்.
இதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்ற பகவந்த் மான், பஞ்சாப் மக்களால் நகைச்சுவை மன்னன் என்று அழைக்கப்படுகிறார். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வந்த அவர், 2011ஆம் ஆண்டு மன்பிரீத் சிங் பாதல் தலைமையிலான பஞ்சாப் மக்கள் கட்சியில் இணைந்தார். அரசியலில் நுழைந்த பின்னர் நகைச்சுவை நடிகர் பட்டத்தை துறந்து, முழுநேர அரசியல்வாதியானார்.
அந்தக் கட்சி சார்பில் 2012இல் முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு கிடைத்த பரிசு தோல்விதான். பிறகு 2014இல் பஞ்சாபில் கால் பதித்த ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார், பகவந்த் மான். கட்சியில் இணைந்தவுடன் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிட்டியது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான சங்ரூரில் மோடி அலைக்கு மத்தியிலும் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இதே தொகுதியில் 2019 தேர்தலிலும் வென்றார், பகவந்த் மான். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், தற்போது துரி சட்டமன்ற தொகுதியில் வென்றுள்ளார். நாடாளுமன்றத்தில் அனைவரும் பாராட்டும் வகையில் உரை நிகழ்த்தக்கூடியவர் எனப் பெயர் பெற்றிருந்த பகவ்ந்த மான், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
பிரபலமான நபராக இருந்தாலும், பகவந்த் மான் மீது ஏராளமான விமர்சனங்களும் உண்டு. குறிப்பாக மதுப்பழக்கத்தால் அவர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். பல முறை மதுபோதையில் பொதுவெளியில் தள்ளாடியபடி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகின. இதனால் கடும் விமர்சனங்களில் சிக்கிய அவர், சில ஆண்டுகளுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், “இனி மது அருந்தப் போவதில்லை.” என்று தனது தாயாரிடம் உறுதிமொழி அளித்தார். அதற்கு பரிசாக மக்கள் அவருக்கு வெற்றியை கொடுத்துள்ள நிலையில் முதலமைச்சராக பகவந்த் மான், மக்கள் மனங்களை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM