‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக மாதிரியான அமைப்புகள் புகழ்ந்து வருகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அந்த படத்தை விமர்சித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரள காங்கிரஸ் கமிட்டி அது குறித்து ட்வீட் செய்திருந்தது. இரண்டு தரப்பும் படத்தின் மையப்புள்ளியை தான் இருவேறு விதமாக சொல்லி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே இந்த படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
“உண்மையை தவறாக சித்தரித்துள்ளது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். ஒரு தலை பட்சமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இளைஞர்களை இந்த திரைப்படம் தவறாக வழிநடத்துகிறது. நமது நாட்டின் பிரதமரே இப்படிப்பட்ட படத்தை புரொமோட் செய்துள்ளார்.
சமூகத்தின் சூழலை குலைக்கும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர். மதத்தின் பெயராலே மீண்டும் நாட்டை பிளவு படுத்துவதற்கான முயற்சிகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990-களில் காஷ்மீரில் வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மொத்தமாக 60.20 கோடி ரூபாயை நேற்று வரை இத்திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.