நடந்த முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில், நகைச்சுவை நடிகரும், இரண்டுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பக்வந்த் மான், முதல்வர் வேட்பாளராக மக்கள் தேர்ந்தெடுத்தனர் என அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலின்போது அறிவித்திருந்தார். பின்னர் பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தேர்தல் முடிவு வெளியான அன்றே, பஞ்சாப் முதல்வராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்க மாட்டேன், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமமான கட்கர் கலனில் தான் பதவியேற்பேன் என கூறியிருந்தார் பக்வந்த் மான்.
இதைத்தொடர்ந்து பக்வந்த் மான் கூறியபடியே, பகத் சிங்கின் கிராமமான கட்கர் கலனில் இன்று முதல்வர் பதவியேற்பு விழா தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்காக 50 ஏக்கர் நிலம் இதற்கென தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், நாகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழாவிற்கு வந்த ஆண்கள் மஞ்சள் நிற தலைப்பாகையும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவையும் அணிந்து வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட சுமார் 10 ஆயிரம் காவலர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். விமரிசையாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், சுமார் 1 மணியளவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்துவைக்க, பஞ்சாப் மாநில முதல்வராக பக்வந்த் மான் பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் பக்வந்த் மான், பஞ்சாப் மாநிலத்தின் 17வது முதல்வரானார்.
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் ஆகியோர் பக்வந்த் மானுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.