இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை’ நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது.
பாராளுமன்றம் தொடர்பான நூல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.
இதன் ஓர் அங்கமாக பாராளுமன்ற முறைமைகள் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாராளுமன்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொது நூலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம், சட்டவாக்க செயற்பாடுகள் மற்றும் பணிகள், குழு முறைமை தொடர்பில் இதன்போது நூலக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், பாராளுமன்றத்தின் பிரசுரமான ‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை நூலும் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கு சமாந்தரமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு கொழும்பு பொது நூலகத்தின் அங்கத்துவ அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாராளுமன்றத்தின் பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர, உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் கலந்துகொண்டனர்.