கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய ரஷிய படைகள், இதுவரை அந்நாட்டின் 10 பெரிய நகரங்களில் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் சில நாட்களாகவே கீவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சரமாரியாக ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கீவ் நகரை 3 பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்துள்ள ரஷிய படைகள், பெரும் தாக்குதலை நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு நேற்று 35 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அங்கு சிக்கியுள்ள மக்கள், பதுங்குக் குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் பதுங்கி இருந்தனர்.
தற்போது கீவ் நகரின் புறநகர் பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில் கீவ் அருகே உள்ள கிராமங்களில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதையும், தீப்பற்றி எரிவதையும் காண முடிகிறது.
அதேபோல் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ்விலும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.மேலும் லிவிவ் நகரில் வான்வழி தாக்குதல்களுக்கான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபடியே உள்ளது. மரியபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்தபடியே இருக்கிறது.