புதுடெல்லி: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கான 84 தனித் தொகுதிகளில் பாஜக 63-ல் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் துப்புரவுப் பணியாளர் ஒருவரும் எம்எல்ஏ ஆகியுள்ளார். இவர் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்ததாக தெரியவந்துள்ளது.
உ.பி.யின் சந்த கபீர்நகர் மாவட்டத்தின் தன்கட்டா தனித்தொகுதியில் கணேஷ் சந்திர சவுகான் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். ஏழை தலித் குடும்பத்தை சேர்ந்த இவர், தன்கட்டா தொகுதியின் முத்தாதிஹா கிராமத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 1995-ல்ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்தார். இவருக்கு 2005-ல் உ.பி. அரசில்துப்புரவுப் பணியாளர் பணி கிடைத்தது.
குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, 2014-ல் பிரதமரான பிறகு அவர் தனது இளம் வயதில் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றதை அறிந்த கணேஷுக்கு அரசியலில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவர் கரோனா பரவல் காலத்தில் அப்பகுதி மக்களுக்கு பலவகையில் உதவி செய்து பிரபலம் அடைந்துள்ளார். இதனால், தனதுமனைவி கலிந்தி தேவி சவுகானை, சந்தி பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வைத்து வெற்றி கண்டார். பிறகு, சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் கணேஷுக்கு தன்கட்டா தொகுதி பாஜக வேட்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது. இதில், கணேஷ் வெற்றி பெற்றார்.
கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 69 தனித்தொகுதிகளில் வென்றது. எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி 7, பிஎஸ்பி 2, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி) 3, அப்னா தளம் (சோனுலால்) 2, சுயேச்சை 1 என மற்றவர்கள் வெற்றி பெற்றனர்.
இவற்றில் எஸ்பிஎஸ்பியும், அப்னா தளமும் பாஜக கூட்டணியில் இருந்தன. இதனால், உ.பி.யின் 84 தனித்தொகுதிகளில் 74 தொகுதிகள் பாஜக கூட்டணி வசம் வந்தன. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி, 2017-ஐ விட 11 தனித் தொகுதிகளை குறைவாகப் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணிக்கு 63 தனித்தொகுதிகள் கிடைத்துள்ளன. பாஜகவின் புதிய கூட்டணியான நிஷாத் கட்சி, தனித்தொகுதிகளில் போட்டியிடவில்லை. முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் கூட்டணிக்கு 20 தனித் தொகுதிகள் கிடைத்துள்ளன. இதில் சமாஜ்வாதி 16, எஸ்பிஎஸ்பி 3, ராஷ்ட்ரியலோக் தளம் ஒரு தொகுதியில் வென்றுள்ளன. பிற எதிர்கட்சிகளான காங்கிரஸும் பிஎஸ்பியும் கடந்த இரண்டு தேர்தல்களிலும் எந்த தனித்தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
துணை முதல்வராக தலித் பெண்
உ.பி.யில் ஆக்ரா மேயராக இருந்த பட்டியல் வகுப்பை சேர்ந்த பேபி ராணி மவுர்யாவை, உத்தராகண்ட் ஆளுநராக பாஜக நியமித்தது. ஆனால் ஆளுநர் பதவிக்காலம் முடியும் முன்பாகவே அப்பதவியை ராஜிநாமா செய்தார் ராணி. பிறகு இவர் பாஜகவின் உ.பி. மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு 84 தனித்தொகுதிகளில் முக்கியப் பிரச்சாரம் செய்தார்.
இதில் கிடைத்த வெற்றியால் பாஜக அரசில் ராணிக்கு, துணை முதல்வர் உட்பட ஒரு முக்கியப் பதவி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.