நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ரஷியாவின் எதிர்ப்பையும் மீறி, நேட்டோவில் இணையும் முயற்சியில் உக்ரைன் இணைந்ததால் கோபமடைந்த ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.
கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இப்போரின் விளைவாக இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. ஒருபுறம் போரை நடத்திக் கொண்டு, மறுபுறும் உக்ரைன் -ரஷியா இடையே போரை நிறுத்துவதற்கான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை போர் குற்றவாளியாக அறிவித்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் குடியரசுக் கட்சி எம்பியான லிண்ட்சே கிரகாம் தீர்மானம் கொண்டு வந்தார்.
உக்ரைன் போரில் ரஷிய அதிபர் புதினை போர் குற்றவாளி என்று கண்டித்து அவர் கொண்டு வந்த தீர்மானம் சபையில் ஒருமனதாக நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை ஏகமனதாக ஆதரவு தெரிவித்தன.
இந்த தீர்மானம் குறித்து ஜனநாயக கட்சியின் மற்றொரு எம்பியான சக்ஷுமர் கூறும்போது “உக்ரைன் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பேற்பதில் இருந்து புதின் தப்பிக்க முடியாது” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.