புதுச்சேரி: புதுச்சேரியில் 90 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி (கோர்பிவாக்ஸ்) போடும் பணி இன்று(மார்ச் 16) தொடங்கியது.
இந்த நிலையில், புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று, முதல்வர் ரங்கசாமி 12 முதல் 14 வயதினருக்கான கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதுச்சேரியில் 7 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 12 முதல் 14 வயது வரையிலான சுமார் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரியில் 12 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மத்திய அரசின் ஆணையின்படி தற்போது தொடங்கியுள்ளோம்.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி விரைவில் அறிவிக்கப்படும். என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.