திருப்புவனம் அருகே புழுதி பறக்க கிடா முட்டு சண்டை வெகு விமர்சையாக நடைபெற்றதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமான ஆட்டு கிடா சண்டை நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை தந்து சண்டையை ரசித்தனர்.
தென்மாவட்டங்களில் ஜல்லிகட்டுக்கு அடுத்தப்படியாக ஆட்டு கிடா சண்டை நடைபெறுவது வழக்கம். இந்த சண்டையில் சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து நீதிமன்றம் கிடா சண்டைக்கு தடை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளுடன் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பொட்டப்பாளையத்திதில் ஆட்டு கிடா சண்டை நடந்தது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் போட்டியில் கலந்து கொண்டு முட்டி மோதின. இதில் அதிக முறை முட்டி எதிராக உள்ள கிடாயை விழுவைத்த கிடாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த முனீஸ் என்பவரின் கிடா 67 முறை எதிராளி கிடாயை முட்டி வீழ்த்தியது. இதற்கு கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. நீண்ட வருடங்களுக்கு பிறகு நடந்த சண்டையை கண்டு ரசிக்க ஏராளமான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM