புதுடில்லி:“நம் நாட்டில் 15 சதவீதமாக உள்ள பெண் ‘பைலட்’களின் எண்ணிக்கையை, 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்,” என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சலுகைகள்
டில்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:நம் நாட்டில் பெண் பைலட்களின் எண்ணிக்கை 15 சதவீதமாக உள்ளது.இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். பெண்களுக்கு ஏற்ற வேலை செய்யும் சூழலை, நம் விமான நிறுவனங்கள் அமைத்து தருகின்றன. மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட பல சலுகைகளை பெண்கள் பெறுகின்றனர்.
எனினும், நாம் அதையும் தாண்டி யோசிக்க வேண்டும். ஆண்களுக்கு மகப்பேறு விடுப்பு தருவது குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம்.குழந்தையை வளர்ப்பதில் ஆண்களுக்கும் சம பங்கு உள்ளது. நான் சம உரிமை குறித்து பேசவில்லை; சம பங்கு குறித்து பேசுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
26 வாரங்கள்
கடந்த 2017ல், மகப்பேறு சட்ட திருத்த மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டப்படி, பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு, 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. அந்த நாட்களுக்கான சம்பளமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Advertisement