லைவ் நியூஸில் போரை நிறுத்த வலியுறுத்திய ரஷ்ய பெண் செய்தியாளர்! ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பு..
ரஷ்யா, உக்ரைன் இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
ரஷ்யாவே முதலில் போரைத் தொடங்கியது. ரஷ்ய அதிபருக்கு எதிராக சொந்த நாட்டினரே போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
போரை நிறுத்துங்கள் புதின் என்று பதாகைகளை ஏந்தி ரஷ்யர்கள் சாலையில் பேரணி செல்கின்றனர். இவர்களை ரஷ்ய போலீஸார் தடையை மீறி போராட்டம் நடத்துவதாக கைது செய்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவில் பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது செய்தி வாசிப்பாளர் திடீரென போரை நிறுத்துமாறு ரஷ்ய அரசை வலியுறுத்தி பதாகையை ஏந்தி நின்றார்.
சினிமா படக் காட்சி போன்று துணிச்சலாக அந்தப் பெண் செய்தியாளர் இதனை செய்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதனிடையே, அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவருக்கு 30,000 ரூபிள்கள் (சுமார் ரூ.20,000) அபராதமாக விதிக்கப்பட்டது. தைரியமான பெண் செய்தியாளர் 2 குழந்தைகளுக்கு தாயாவார்.
பிரான்ஸ் ஈபிள் டவரின் உயரம் அதிகரிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரமத்தின் உயரம் 6 மீட்டர் வரை அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ரசித்து விரும்பிப் பார்க்கப்பட்டு வரும் ஈபிள் கோபுரத்தின் மீது ரேடியோ ஆன்டெனா பொருத்தப்பட்டது.
இதையடுத்து, அதன் உயரம் 6 மீட்டர் அதிகரித்தது. அதாவது சுமார் 19 அடி உயரமானது. 19ஆம் நூற்றாண்டில் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் இந்த கோபுரம் கட்டப்பட்டது. தற்போது இதன் உயரம் 330 மீட்டராக ஆகியுள்ளது. டிஜிட்டல் ஆன்டெனாவை ஹெலிகாப்டர் மூலம் பொருத்தினர்.
வாஷிங்டன் நினைவுச்சின்னத்தை விட உயரமாக கட்டப்பட்ட ஈபிள் டவர், மனத உழைப்பால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கட்டமைப்பு என்ற சாதனை படைத்தது. நியூயார்க்கில் 1929 ஆம் ஆண்டில் கிறிஸ்லர் கட்டடம் இதை விட உயரமாக கட்டப்பட்டதை அடுத்து, இந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது.
ஆசிய பெண்ணின் தலையில் 125 முறை தாக்கிய அமெரிக்கர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள யாங்கர் பகுதியில் ஆசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை அமெரிக்கர் தலையில் 125 முறை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிய பெண் என்பதாலேயே அவர் மீது அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக டாம்மல் எஸ்கோ என்பவரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசியாவைச் சேர்ந்தவர்கள் மீது அமெரிக்காவில் சமீப காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கு சென்ற 3 நாட்டுத் தலைவர்கள்!
நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கிற 3 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரயில் மூலம் கீவ் நகருக்கு நேற்று விரைந்தனர்.
அவர்கள் போலந்து பிரதமர் மேத்யூஸ் மோராவீக்கி, செக் குடியரசின் பிரதமர் பீட்டர் பியாலா, சுலோவேனியாவின் பிரதமர் ஜானேஸ் ஜான்சா ஆகியோர் ஆவார்கள். போலந்தின் மூத்த தலைவர் ஜரோஸ்லா காசின்ஸ்கியும் இந்த குழுவுடன் இணைந்துள்ளார்.
புதினுக்கு சவால் விடுத்த பிரபல தொழிலதிபர்.. மனிதாபிமான உதவி கண்காட்சி.. மேலும் செய்திகள்
உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு பணியாக அங்கு சென்றிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பிய கூட்டமைப்பின் அதிகாரிகள், உக்ரைனில் பாதுகாப்பு அபாயங்கள் இருப்பதாக கூறியபோதிலும், மத்திய ஐரோப்பிய தலைவர்கள் பயணம் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இவர்கள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும், பிரதமர் டெனிஸ் ஷிமிகாலையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“