உலகம், ரஷ்யாவைப் பார்த்து எங்களுக்கு பயமில்லை என்று சொல்லத் துடிப்பது போல் இருக்கிறது, சமீபத்தில் நடந்துள்ள சில சம்பவங்களைப் பார்த்தால்!
வல்லரசு என கருதப்படும் ரஷ்யாவை சிறிய நாடாகிய உக்ரைன் சற்றும் பயப்படாமல் துணிந்து எதிர்த்து நின்றபோதே, உலக நாடுகள் பல மூக்கின் மேல் விரல் வைத்தன.
இந்த விளையாட்டில் நான் இல்லையப்பா என சில நட்பு நாடுகளே ஒதுங்கிக்கொண்டன…
இந்நிலையில், உக்ரைனில் கடுமையான போர் நடக்கும்போதே, அங்கு சென்று உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்திருக்கிறார்கள் மூன்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்.
ஆம், போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் தலைநகர் Kyivக்கே சென்று தன்னை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதியாகிய வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
அவர்களை சந்தித்த பிறகு, இனி எதற்கும் பயமில்லை, இப்படிப்பட்ட நண்பர்கள், இப்படிப்பட்ட நாடுகள், அயலகத்தார் மற்றும் கூட்டாளிகள் இருக்கும்போது, எங்களால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.
ஜெலன்ஸ்கியை சந்தித்த தலைவர்கள், ரஷ்யா மீது தடைகள் விதிப்பது குறித்து விவாதித்ததோடு மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை, போர் முடிந்ததும் உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவது குறித்தும் விவாதித்துள்ளார்கள் அவர்கள்.
அந்த தலைவர்களை சந்தித்ததைத் தொடர்ந்து உற்சாகம் அடைந்துள்ள ஜெலன்ஸ்கி, தற்போது மற்ற நாடுகளின் தலைவர்களுக்கும், தன்னை Kyivஇல் வந்து சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
நண்பர்கள் அனைவரும் Kyivஐ சந்திக்க உக்ரைனுக்கு வர உங்களை வரவேற்கிறேன் என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, ஆனாலும், இன்னமும் தங்கள் வான்வெளி ரஷ்ய ஏவுகணைகளுக்கும் விமானங்களுக்கும் மூடப்படவில்லை என்பதால், நிலைமை அங்கு அபாயகரமாகத்தான் உள்ளது என எச்சரிக்கவும் தவறவில்லை.