திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் புதன்கிழமை (மார்ச் 16) போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். தூத்துக்குடியைச் சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தூத்துக்குடியில் உள்ள புதியம்பத்தூர் பகுதியில் உள்ள நீராவிமேடு என்ற தெருவில் வசித்து வந்த ரவுடி முருகன் நீராவிமேடு என்ற பகுதியில் வசித்து வந்ததால் நீராவி முருகன் என்று அழைக்கப்பட்டர்.
கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் போலீசார் இன்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். நீராவி முருகனை கைது செய்யமுயன்றபோது அவர் அரிவாளால் வெட்டியதில் 4 போலீசார் காயமடைந்தனர். காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்த பின், தென்மண்டல ஐ.ஜி அன்பு, ரவுடி நீராவி முருகன் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “நெல்லையில் ரவுடி நீராவி முருகன் என்கவுண்டர் தொடர்பாக களக்காடு போலீஸ் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்காப்புக்காகவே நீராவி முருகன் சுடப்பட்டார் என்று கூறினார்.
மேலும், தென் மண்டல ஐ.ஜி கூறியதாவது: “திண்டுக்கல்லில் நடந்த ஒரு கொல்லை வழக்கில், அடிப்படையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முயன்றபோது இது நடந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன் முருகன் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை என 60-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இருக்கிறது. பெண்களை அச்சுறுத்தி நகைகளைப் பறிப்பதில் பெரிதும் ஈடுபடக்கூடியவர் இவர். தொடர்ச்சியாக பெரிய பெரிய கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். பிடிக்கப் போகும்போது போலீசாரை தாக்கிய வழக்குகளும் பதிவாகி இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான், அவர் இங்கே இருக்கின்ற தகவல் கேட்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற துப்பு கிடைத்து சிறப்பு படை அவரை தேடி வருகிறார்கள். தேடி வரும்போது விரட்டிப்போய் பிடிக்கும்போது அவர் ஒவ்வொரு போலீசாரையும் தாக்கியிருக்கிறார். தற்காப்புக்காகவே எஸ்.ஐ சுட்டிருக்கிறார். இதனுடைய மேற்படி விசாரணை நீதிமன்ற நடுவர் நடத்தும்போது தெரியவரும்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”