மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகராக இருந்த நானா பட்டோலே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாநில காங்கிரஸ் தலைவராகிவிட்டார். இதனால் கடந்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து சபாநாயகர் பதவி காலியாக இருக்கிறது. சபாநாயகர் தேர்தலை ரகசியமாக நடத்தினால் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்துவிடக்கூடும் என்று ஆளும் கட்சி அச்சப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே சபாநாயகர் தேர்தலுக்கான விதிகளை மாநில அரசு கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாற்றியமைத்தது.
இதன்படி சபாநாயகரை மறைமுகமாக தேர்ந்தெடுப்பதற்கு பதில் நேரடியாக, அதாவது கையை தூக்கி அல்லது குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்ய முடியும். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை சபாநாயகர் தேர்தலை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று கோரி ஆளுநரை ஆளும் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் கடைசி வரை தேர்தலுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை.
ஆளுநரின் உத்தரவை மீறி தேர்தலை நடத்த மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டது. ஆனால் சட்டச்சிக்கல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 16-ம் தேதி, அதாவது இன்று மீண்டும் சபாநாயகர் தேர்தலை நடத்த மாநில அரசு கடந்த 9-ம் தேதி முடிவு செய்தது. இதை எதிர்த்து பாஜக தலைவர்களில் ஒருவரான கிரிஷ் மகாஜன் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாஜக தலைவரின் மனுவை தள்ளுபடி செய்து சபாநாயகர் தேர்தலில் தலையிட முடியாது என்று தெரிவித்துவிட்டது.
இதை எதிர்த்து கிரீஷ் மகாஜன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட் விசாரணையில் இருப்பதால் தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று ஆளுநர் கொஷாரியா மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதனால் மீண்டும் சபாநாயகர் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சட்டமேலவை நியமன உறுப்பினர்கள் 12 பேரை நியமிக்கும் திட்டத்திற்கு ஆளுநர் கடந்த பல மாதங்களாக ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார் என்ற குற்றசாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.