அமைச்சர் நேருவின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் நேரு மனைவியைக்கூட கோபமாகத்தான் கொஞ்சுவார் என்று ஜாலியாக கம்மெண்ட் அடிக்க திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மறைந்த தம்பி ராமஜெயம் மகன் விநீத்நந்தன் – அக்ஷயா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. அமைச்சர் நேரு குடும்ப திருமண விழாவில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவருடைய மனைவி துர்கா, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகன் வினீத்நந்தன் – அக்ஷயா திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் நேருவைப் பற்றியும் அவருடைய குடும்பத்தினரைப் பற்றியும் புகழ்ந்து பேசினார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரு கோபமாக பேசும் விதத்தைக் குறிப்பிட்டு, அமைச்சர் நேரு மனைவியைக்கூட கோபமாகத்தான் கொஞ்சுவார் என்று ஜாலியாக சொல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.
நேருவின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கல்ந்துகொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: “எப்போதும் நேரு கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டார். நேரு அவர்களுடைய சொல்லுக்கு கட்டுப்பட்ட தம்பியாக விளங்கியவர் தம்பி ராமஜெயம். நேருவாக இருந்தாலும் சரி ராமஜெயமாக இருந்தாலும் சரி, தம்பி ரவியாக இருந்தாலும் சரி, கழகத்திற்காக உழைப்பதிலே எதையும் அவர் எதிர்நோக்கி உழைத்ததில்லை. கழகத்தினுடைய வளர்ச்சிக்காக தலைவர் கலைஞருடைய புகழுக்காக உழைத்தவர்கள் இன்றைக்கும் உழைத்துக்கொண்டிருக்கக்கூடியவர்கள், ஆக பல நேரங்களில் பல துன்பங்களை பல தொல்லைகளை அனுபவித்தவர்கள், அதை எதிர்கொண்டவர்கள். கழகத்திற்காக உழைத்த குடும்பங்கள் உண்டு. முதல் குடும்பம் எந்த குடும்பம் என்று என்னைக் கேட்டால் அது நேருவினுடைய கும்பமாகத்தான் நிச்சயமாக இருக்க முடியும். ராமஜெயத்தை நாம் இழந்தபோது, நேரு அடைந்த துயரம் போலத்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களும் கண்ணீர் விட்டு அழுதார்கள், கவலைப்பட்டார்கள். அப்போது கலைஞர் முரசொலியில் குறிப்பிட்ட இரங்கல் செய்தியில், நேருவின் தம்பி ராமஜெயத்தை நேரில் நின்று எதிர்க்கமுடியாமல் எப்படியோ கடத்திக்கொண்டு போய் வீழ்த்திவிட்டது வீணர் கூட்டம். சிலையாய் நிற்கிறாய் நீ, புகழ் மலையாய் நிலைத்திருக்கும் உன் பெயர் என்று எழுதினார் கலைஞர். அவரது வரிகள் வீண் போகாது என்பதின் அடையாளம்தான், இன்றைய தினம் ராமஜெயத்தின் இல்லத்தில் நடக்கக்கூடிய திருமணத்துக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்துகொண்டு இந்த குடும்பத்தினுடைய செல்வங்களை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஏதாவது, நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில், தலைவர் கலைஞர் எண்ணக்கூடிய உணர்வுகளை, நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால், அதை யார் மூலம் செய்யலாம் என்று பேசிக்கொண்டிருக்கும்போது நேருவைக் கூப்பிடுங்கள் என்றுதான் தலைவர் கலைஞர் பலமுறை கூப்பிட்டிருக்கிறார்.
அண்மையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடந்தது. இங்கே மணமக்களை வாழ்த்திய கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லாம் நேருவை புகழ்ந்து பேசினார்கள். ஆனால், மனசுக்குள் என்ன கோபத்தில் இருப்பார்கள் என்று தெரியும். ஏனென்றால், பேச்சுவார்த்தைக்கு நேரு, வேலு போன்றவர்களை அனுப்பித்தான் முடிக்கச் சொன்னேன். ஏனென்றால், ஒரு வேலையை நேருவிடம் கொடுத்தால் நிச்சயமாக நிறைவேறும் என்று எனக்குத் தெரியும். இங்கேகூட முத்தரசன் சொல்லும்போது சொன்னார்கள். தமிழ்ல அழகாக பேசுவார். அதைவிட இன்னும் பல மொழிகளில் பேசுவார். அது எங்களுக்கும் தெரியும் இங்கே இருக்கக்கூடிய மற்ற அத்தனை பேருக்கும் தெரியும். அவர் என்ன பேசுவார் என்று நாட்டுக்கே தெரியும். உலகத்துக்கே தெரியும்.
நேரு இன்றைக்குதான் கொஞ்சம் அமைதியாக இருக்கும் காட்சியைப் பார்க்கிறேன். எப்போதும் படபடனு இருப்பார். அங்கே ஓடுவார், இங்கே ஓடுவார், ஒரு இடத்தில் நிற்க மாட்டார். அதற்கு என்ன காரணம் என்றால் ராமஜெயம் இல்லையே என்கிற காரணம்தான். கவலைப்படாதீர்கள் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். எல்லார் இடத்திலும் வேகமாகத்தான் பேசுவார். நல்ல காரியமாக இருந்தாலும் சரி, கெட்ட காரியமாக இருந்தாலும் சரி வேகமாகத்தான் பேசுவார். செல்வேந்திரன் தான் அடிக்கடி சொல்வார். நேரு எப்பவுமே கோபமாக படபடப்பாத்தான் இருப்பார். மனைவியை கொஞ்சுகிறபோது கோபமாகத்தான் கொஞ்சுவார் என்று சொல்வார். அந்த அளவுக்கு நேரு குடும்ப பாசமுள்ளவர். எல்லாரிடத்திலும் அன்போடு பழகக்கூடியவர்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“