சென்னை:
புனித தோமையார்மலை தெற்கு ஒன்றியம் திமுக சார்பில் மக்களின் மகிழ்ச்சி மாநில வளர்ச்சி வாழ்த்தரங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கே.எஸ். கிராண்ட் பேலஸ் மேடவாக்கத்தில் நடை பெற்றது.
முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மேடவாக்கம் ப.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்தாலப்பாக்கம் எஸ்.ரவி மாவட்ட பிரதிநிதி ரங்கநாதன், மற்றும் வேணுகோபால் ஒன்றிய பொருளாளர் ராஜி, ஒன்றிய பொறுப்பு உறுப்பினர்கள் கே.குமார், மனோநீதி, சமாதானம் நல்லமுத்து உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
நடிகர்கள் ராஜேஷ், தியாகராஜன், பாண்டியராஜன், ரமேஷ் கண்ணன், தம்பிராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வரின் சாதனைகளை குறித்து உரை நிகழ்த்தினர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
ஏழைகளுக்கு தையல் மிஷின்கள் 23, இஸ்திரி பெட்டிகள் 23, மாற்றுதிறனாளிகளுக்கு சக்கரவண்டி 23 ஆகியவற்றை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்தியாவே தி.மு.க தலைவரை பாராட்டி கொண்டு இருக்கிறது. முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்ற போது தமிழகம் எப்படி இருந்தது. ஆபத்தான கொரோனா இருந்த சூழ்நிலை. 25 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கைகள் இல்லாத நிலை இருந்தது.
முதல்-அமைச்சர் போர்கால நடவடிக்கை எடுத்தார். அதற்கு துணையாக இருந்தவர் மா.சுப்பிரமணியன். கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி தான். தடுப்பூசி கிடைக்காமல் தட்டுபாடாக இருந்தது. அதிமுக ஆட்சியில் தடுப்பூசி என்றால் பயத்துடன் இருந்தனர்.
ஆனால் அந்த பயத்தை போக்கி 10 மாதங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி 10 கோடியே 11 லட்சத்தி 20 ஆயிரத்தி 580 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன. முதல் டோஸ் 5 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்தி 792 பேருக்கும் 2வது டோஸ் 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 496 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 7 லட்சத்து 3 ஆயிரத்தி 290 பேருக்கும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டு உள்ளது. 1453 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பு உள்ளது. இந்தியாவில் முதன் முறையாக புற்று நோய் சிகிச்சைக்காக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் ஹாட்ரிக் வெற்றி பெற்று உள்ளார். தமிழக மக்கள் ஒரு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளனர். முதலில் பாராளுமன்றம் தேர்தல் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கண்டு தமிழ்நாடு முதலமைச்சர் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் சரித்திர வெற்றி. அவரது உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன் மற்றும் மேடவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் சிவபுஷ்ணம் ரவி மற்றும் புனித தோமையார் மலை ஒன்றியத்திற்குட்பட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் மாவட்ட துணை அமைப்பாளர் சிறுபான்மை பிரிவு எச்.டி போஸ் நன்றியுரை ஆற்றினார்.
இதையும் படியுங்கள்… நெல்லை அருகே என்கவுன்ட்டர்- தூத்துக்குடி ரவுடி சுட்டுக்கொலை