மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் காட்ஃபாதர் படத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் இணைந்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவாவின் இயக்கத்தில் தற்போது ‘ஆச்சார்யா’ படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்‘ என்ற படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ‘காட்ஃபாதர்’ திரைப்படம். இந்தப் படம் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்தப் படத்திற்காக மும்பையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இந்த படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கானுக்கு பூங்கொத்து கொடுக்கும் போட்டோவை பகிர்ந்து ‘காட்ஃபாதர்’ படத்தில் சல்மான் கான் நடிப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், உங்கள் வரவு அனைவரையும் உற்சாகப்படுத்தியுள்ளதுடன், அந்த உற்சாகம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. உங்களுடன் திரையைப் பகிர்வதில் மகிழ்ச்சி. உங்கள் நடிப்பு பார்வையாளர்களுக்கு அந்த மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியல் படமாக உருவான ‘லூசிஃபர்’ படத்தில் கேமியோ ரோலில் பிருத்விராஜ் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் சல்மான்கான் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான்கான் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.