‘நீங்கள் வைக்கும் மொய்ப்பணம் அப்படியே ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்கப்படும்..’ என்று அழைப்பிதழில் குறிப்பிட்டு மதுரையில் இன்று நடந்த திருமணம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மதுரையைச் சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியைச் சேர்ந்த பாலகுமாருக்கும் இன்று காலை திருமணம் சிறப்பாக நடந்தது.
இத்திருமணத்திற்காக இவர்கள் கொடுத்த அழைப்பிதழில், ‘அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்லத்தின் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது உறவினர், நண்பர்களை ஆச்சரியப்படுத்தியது.
தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் மொய் வைத்தே நடத்தப்படுகிறது. அதிலும் மதுரை மாவட்டத்தில் திருமணம், காதணி விழா, புதுமனை புகுவிழா இல்லாவிட்டாலும், நட்பு விழா, இல்ல விழா, வசந்த விழா என்ற பெயரில் தாங்கள் வைத்த மொய்யை திரும்ப பெறுவதற்காகவே விழாக்கள் நடத்தப்படுவதுண்டு.
இச்சூழலில் மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லத்துக்கு வழங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
திருமண விழாவுக்கு நாமும் சென்றோம். மொய் எழுதும் மேஜை அருகே காகித உறைகளையும் பேனாவும் வைத்திருந்தார்கள். மொய் வைக்க நினைபவர்கள் தங்கள் பெயரை எழுதி தொகையை உறைக்குள் வைத்து அருகிளுள்ள பானைக்குள் போட்டுச் சென்றார்கள். யார் எவ்வளவு பணம் என்பதையும் குறிப்பிடவில்லை. அவர்கள் வைத்த மொய்யை நோட்டிலும் எழுதவில்லை.
இதுகுறித்து மணமகளின் தந்தை ஆத்மராவிடம் பேசினோம், “நாம வாழ்ந்த வாழ்க்கையில பெரிய அளவில் யாருக்கும் உதவி பண்ண வாய்ப்பு அமையல. அதான், என் மகள் திருமணத்துக்கு வர்ற மொய்ப்பணத்தை அப்படியே ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். குடும்ப உறுப்பினர்கள் முதல்ல இதுக்கு ஒத்துக்கல. அப்புறம் அவங்களை கன்வீன்ஸ் பண்ணி ஒத்துக்க வச்சேன். இத நான் பப்பளிசிட்டிக்காக பண்ணல, ஆதரவற்றோர் மீதான அக்கறையாலும் அதனால் ஏற்படுகிற மன் திருப்திக்காகவும்தான். இதைப்பார்த்து இன்னும் பல பேர் ஆதரவற்றோர்களுக்கு உதவ முன் வரணும் என்கிற எண்ணம்தான். எவ்வளவு மொய்ப்பணம் வந்தாலும் அதை அப்படியே செக் அல்லது டி.டி.யா மாத்தி கொடுக்கப் போறோம்.” என்றார்.
நல்ல முயற்ச்சிக்கு பாராட்டும் மணமக்களுக்கு வாழ்த்தும் கூறிவிட்டு வந்தோம்.