வாஷிங்டன்,
உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பிற நாடுகள் உக்ரைன் மீதான ரஷியாவின் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை முன்னெடுக்க உதவும்.
இந்த தீர்மானத்தை குடியரசுக்கட்சி எம்.பி. லிண்ட்ஸே கிரஹாம் முன்மொழிந்தார். இதனை குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் என அனைவருமே ஆதரித்தனர்.
இந்த தீர்மானம் குறித்து ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சக் ஸ்கூமர் பேசுகையில், “இந்த அவையில் உள்ள அனைவரும் இன்று ஒரு விஷயத்தில் உடன்பட்டுள்ளோம்.
ஜனநாயகவாதிகள், குடியரசுவாதிகள் என்ற பாகுபாடில்லாமல் ஒன்றுபட்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர் குற்றவாளி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.
உக்ரைன் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள வன்முறைகளுக்கு புதின் கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து புதினால் நிச்சயமாக தப்பிக்க முடியாது” என்றார்.
உக்ரைன் மீதான தாக்குதலை, ரஷியா ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்று அழைக்கிறது. ரஷியாவின் இந்த ராணுவ நடவடிக்கைகள், உக்ரைனை நாசிகள் நாடாக மாறுவதில் இருந்து தடுப்பதற்காகவும் அதன் ராணுவத்தை தகர்ப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது என்று ரஷிய தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது.
உக்ரைன் ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்ட அமெரிக்காவின் காலனி நாடாக செயல்படுகிறது. அங்கு சுதந்திரமான அரசாங்கம் இல்லை என்று புதின் குற்றம் சுமத்தியுள்ளார்.
உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய ரஷிய படைகள், இதுவரை அந்நாட்டின் 10 பெரிய நகரங்களில் எதையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.