சியோல்,
ரஷியாவின் கொடூர தாக்குதலால் உருக்குலைந்து உள்ள உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் போ சியூங் சான் கூறியதாவது,
“உக்ரைனுக்கு மொத்தம் 20 உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். அவற்றுள் 12 உபகரணங்கள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், போர்வைகள், உணவு போன்ற பொருட்கள் ஆகும். மீதமுள்ளவை மருத்துவ உபகரணங்கள் ஆகும். இந்த பொருட்களுக்கான மொத்த செலவு, தென்கொரிய பண மதிப்பில் 100 கோடி வோன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ உதவி பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரம், மேற்கண்ட பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தென்கொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம், ரஷிய கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ள தொலைதொடர்பு வசதி தொடங்கப்பட உள்ளது. இதற்கன ரஷியாவின் தொலைதொடர்பு நெட்வொர்க் பதிவிறக்கம் செய்யப்பட்டு விட்டது. இருநாடுகளுக்கும் இடையே பரிசோதனை முறையிலான அழைப்புகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த தொலைதொடர்பு இணைப்பு முறையாக தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.