கீவ்: ரஷ்ய அரசு இணையதளத்தை முடக்க 3 லட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘சைபர் கெயாஸ்’ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த மூன்று வாரங்களாக தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்க உக்ரைன் ஐடி ஆர்மி முயற்சி மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதற்காக உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 லட்சம் கணினி ஹேக்கர்கள் இரவு பகலாக கோடிங் செய்து வருகின்றனர்.
இதன் மூலமாக ரஷ்யாவின் முக்கிய வர்த்தகத் தொடர்புகள் மற்றும் அன்றாட அரசு பணிகள் பாதிக்கப்படும். இதனால் ரஷ்யா-உக்ரைனில் போர் புரிவதை நிறுத்திக் கொள்ளும் என்று உக்ரைனின் ஜெலன்ஸ்கி அரசு கருதுகிறது. உலகெங்கிலும் பல பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்குவது வாடிக்கை. வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முன்னதாக இதே போன்று அமெரிக்க அரசு இணையதளத்தை முடக்க முயற்சி மேற்கொண்டதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதலை நிறுத்துவதற்காக ஜெலன்ஸ்கி அரசு ஹேக்கர்களின் உதவியை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் ஐடி ஆர்மி ஆப் உக்ரைன் லிங்க் உக்ரைன் மின்னணு தகவல் பரிமாற்ற துறை அமைச்சர் மைகைலோவ் பெட்டோரோவால் கடந்த மாதம் பகிரப்பட்டது. இதனை அடுத்து இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் ரஷ்யா உக்ரைன் மீது தனது ஹேக்கர்கள் கொண்டு எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.
Advertisement