செல்போன் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரை தாக்கிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (23). இவர் அதே தெருவில் ஐஸ் கடை நடத்தி வரும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி பொருளாளர் அனிஷ் (29) என்பவரின் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் பாலாஜிக்கு, அனிஷ் சம்பள பாக்கி தர வேண்டியதாக கூறப்படுகிறது. அதற்காக கடையில் வேலை செய்யும் நபர்களின் செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பாலாஜி திருடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாலாஜியை அனிஷ் மற்றும் அவரது நண்பர்களான பாலகுமார், ராஜேஷ், நிசார் அகமது, அப்துல் ரகுமான், முகேஷ் கண்ணா, மாதவன், மனோஜ்குமார் உள்ளிட்ட 9 பேர் சேர்ந்து கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாலாஜிக்கு தலை, உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனைத்தொடர்ந்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் பல்லாவரம் சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரித்தில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகி உட்பட 9 பேரையும் கைது செய்து, வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.