சென்னை:
ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கம் முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான் என்றும், அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
முறையான அனுமதி அவர்களுக்கு கிடைக்காமல் அதற்கான பணிகளை தொடங்க முடியாத சூழலில், மீண்டும் அந்த அனுமதியை பெற்ற பிறகு பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொருத்தவரை, டெபாசிட் 10 சதவீதமாக இருந்ததை குறைத்து தமிழக அரசின் மின்சார வாரியம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.
எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதலில்லை. அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்து உள்ளார்.
2006ல் துவக்கப்பட்ட திட்டம் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அதிமுக ஆட்சியில் டெபாசிட் தொகை 10 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டதால்தான் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
2020ல் மின்திட்டங்களுக்கு வைப்பு தொகை 3% என மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. 2019-ல் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மின்வாரிய திட்டங்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். எனவே, அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.