2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மார்ச் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது 20ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிதிநிலை அறிக்கையை பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸ் கூறியதால், அவ்வாறே வழங்கி இந்த நிகழ்வை தொடங்கினர்.
பா.ம.க.வின் 20ஆவது நிதிநிலை அறிக்கையை பற்றி ராமதாஸ் கூறியதாவது:
” தமிழக அரசு 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 18ஆம் தேதி) வெளியிடவுள்ள நிலையில், நாங்கள் நிழல் நிதியறிக்கை வெளியிடுகிறோம். எங்கள் அறிக்கையில் 123 தலைப்புகளுடன் 490 யோசனைகள் பரிந்துரை செய்கிறோம்.
இந்த நிதியறிக்கை கிராம சபையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். கிராம சபையில் மக்களிடம் கலந்தாலோசித்து, அவர்களின் குறை நிறைகளை தெரிந்துகொண்டு, மூன்று மாதங்களில் அறிக்கையை அரசு தயார் செய்ய வேண்டும்.
பா.ம.க.வின் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால்:
– தமிழ்நாடு பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லாததால், ஏழை குடும்பங்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் அடிப்படை வருமானமாக வழங்க வேண்டும்.
– தனியார் தொழில்/வணிக நிறுவனங்கள் தமிழர்களுக்கு 80% இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் திட்டங்களுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்குவது கட்டாயம் ஆக்க வேண்டும்.
– ஆண்டிற்கு 100 நாட்கள் சட்டப்பேரவை கூடி மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் நடத்துவதால் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
– பெட்ரோல், டீசல் விலை தமிழ்நாட்டில் லிட்டருக்கு ரூபாய் ஐந்து குறைக்கப்பட வேண்டும்
– 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும்
– படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகையாக ரூபாய் ஐந்தாயிரம் வரை வழங்க வேண்டும்
– தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அனைத்துத் தேர்வு வாரியங்கள் பனி நியமனம் செய்வதில் நேர்காணலை இரத்து செய்ய வேண்டும், மேலும் தேர்வு கட்டணம் இரத்து செய்யவேண்டும்.
– தமிழ்நாட்டில் உழைப்பாளர் நாளான மே முதல் நாளிலிருந்து முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.”, என்று பல யோசனைகளுடன் வெளியிட்டுள்ளனர்.