சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் சாம்சங் நிறுவனத்தின் கம்ப்ரசர் தொழிற்சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ‘உங்களைப் போன்ற மற்ற தொழில்நிறுவனங்களையும் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்து வாருங்கள்’ என்று இந்த நிகழ்ச்சியில் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
பெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் காற்றழுத்த கருவிகள் (கம்ப்ரசர்) உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் நிறுவுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு – சாம்சங் நிறுவனம் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
கடந்த 2006-ல் பெரும்புதூரில் சாம்சங் நிறுவனம் ரூ.450 கோடிமுதலீட்டில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், கணினித் திரைகள், குளிர்சாதனம், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் தயாரிக்கும் ஆலையை அமைத்தது. இந்த ஆலையை 2007 நவ.13-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிலையில், தற்போது அடுத்தகட்ட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆண்டுக்கு 80 லட்சம் கம்ப்ரசர்கள் உற்பத்தி செய்யவும், 2024 இறுதிக்குள் 1.44 கோடி உற்பத்தியை எட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தமிழக அரசின் லட்சியத்துக்கு ஏற்ப, உள்ளூர் மக்களுக்கு வேலை அளிப்பதிலும், பெண்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்பு வழங்குவதிலும் சாம்சங் நிறுவனத்தின் பங்கு பாராட்டுக்குரியது.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது, பல தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவந்தார். அந்த நிறுவனங் களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு நான் அடிக்கல் நாட்டி வருகிறேன்.
சாம்சங் நிறுவனத்துக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு உண்டு. கடந்த 2010-ல் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, சாம்சங் உயர்நிலை நிர்வாகிகளை சந்தித்து, தமிழகத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டுகோள் விடுத்தேன். அதை ஏற்று, 2010-ல்முதலீட்டை ரூ.800 கோடியாக உயர்த்தியது. தொடர்ந்து, குளிர்சாதனங்கள் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தேன். தற்போது அந்த முதலீடு ரூ.1,800 கோடியாக உயர்ந்துள்ளது. முதலீடுஅதிகரிப்பதால் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. அதன்மூலம் தொழில் துறை வளர்ந்து, உற்பத்தி சூழல் வலுப்பெறுகிறது.
மின்னணுவியல் சார்ந்த உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகத்தின் பங்களிப்பு 20 சதவீதம். இதை கருத்தில் கொண்டுதான் உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்கும் வகையில், இதை வளர்ந்து வரும் துறையாக தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது. எந்த துறையாக இருந்தாலும் அதில் முன்னணி வகிக்க வேண்டும். அதன்பிறகு, முதல் நிலை என்ற இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.
வரும் 2030-க்குள் மாநில பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாக, உங்கள் தயாரிப்பு வரிசையை பல்வகைப்படுத்தி விரிவாக்கம் செய்யுங்கள். செமிகண்டக்டர் உற்பத்தி திட்டத்தை நிறுவுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இதற்கான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. உங்களைப் போன்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழகத்தை நோக்கி அழைத்து வாருங்கள்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்னி, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன தென்மேற்கு ஆசிய தலைவர் கென் காங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.