கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அத்துடன், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே, மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பாக அரசாணையையும் அம்மாநில பாஜக அரசு பிறப்பிதத்து.
இந்த நிலையில், மாணவிகள் தொடர்ந்த வழக்கில்
கர்நாடக உயர் நீதிமன்றம்
நேற்று தீர்ப்பளித்தது. அதன்படி, ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கர்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை செல்லும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மாணவிகளும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஹோலி விடுமுறைக்கு பிறகு ஹிஜாப் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடத்தப்படும் என
உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.