பெங்களூரு: கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த 18 அரசு அதிகாரிகளை குறி வைத்து 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள், பல நூறு கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில், 18 அரசு அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை குறி வைத்து இன்று அதிகாலை முதல் மாநிலத்தில் சுமார் 75 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து துறை, பெங்களூரு வளர்ச்சி குழு, வனத்துறை, பாசன துறை, பொதுப்பணி துறை, சமூகநல துறை சுற்றுச்சூழல் துறை போன்ற பல துறையை சேர்ந்த அதிகாரிகள் வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் ரொக்கப்பணம், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் என பல நூறு கோடி மதிப்பில் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு, தக்சிண கன்னடா, ராய்ச்சூர், மைசூரு, தாவன்கரே, ராம்நகர், விஜயபுரா, கதக் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் 300 பேர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 100 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே சமயத்தில் 18 அரசு உயரதிகாரிகள் வீட்டில் நடத்தப்படும் இந்த சோதனை கர்நாடக அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைப்பற்றப்பட்டுள்ள சொத்துக்களின் பட்டியல் தயார் செய்த பிறகு அனைத்து அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் முறையான விசாரணை நடத்த உள்ளனர்.