பஞ்சாப் முதல்வராகி வரலாறு படைத்துள்ளார்
பகவந்த் மான்
. பகவத் சிங் பிறந்த பூமியில் நின்று கொண்டு பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சூளுரைத்துள்ளார் பகவந்த் மான். இந்த நேரத்தில் தொலை தூரத்திலிருந்து ஒரு அன்பான வாழ்த்தை அனுப்பி வைத்து புன்னகைத்து நிற்கிறார் இந்தர்ப்ரீத் கெளர்.
கெளர் வேறு யாருமல்ல.. பகவந்த் மானின் முன்னாள் மனைவிதான். இருவரும் 2015ம் ஆண்டிலேயே பிரிந்து போய் விட்டனர். ஆனால் மான் பெற்ற முதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் கெளர். 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மான் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் போட்டியிட்டார் மான். இந்தத் தொகுதியில் கணவருக்காக தீவிரமாக வாக்கு வேட்டையாடி அவரது வெற்றிக்காக பாடுபட்டவர் கெளர்.
ஆம் ஆத்மி
சார்பில் பஞ்சாபில் மான் பெற்ற வெற்றியை மிகவும் உற்சாகமாக கொண்டாடினார். தனது கணவருக்கு முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கெளர் துணையுடன் மான் சங்ரூர் தொகுதியில் பிற கட்சி வேட்பாளர்களை வேட்டையாடிய விதத்திலேயே தெரிந்தது, எதிர்காலத்தில் இவர் பெரும் பெரும் கட்சிகளையே ஓட ஓட விரட்டுவார் என்று.
ஆனால் அந்தக் கனவு தம்பதி 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டது. கெளர் கலிபோர்னியா போய் விட்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகனது பெயர் தில்ஷன் மான் 17 வயதாகிறது.மகள் பெயர் சீரத் கெளர் மான். 21 வயதாகிறது. இருவரும் தாயுடன் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். இன்று நடந்த மான் பதவியேற்பு விழாவில் இரு பிள்ளைகளும் கலந்து கொண்டு அப்பாவின் பதவியேற்பைப் பூரிப்புடன் பார்த்து மகிழ்ந்தன.
இதே பூரிப்பு கெளருக்கும் இருந்தது. அமெரிக்காவில் இருந்தபடி தனது முன்னாள் கணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் கெளர். எப்போதும் எனது கணவருக்காக நான் பிரார்த்திப்பேன். எனது எல்லா பிரார்த்தனைகளிலும் மான் இருப்பார். அதேபோல இப்போதும் பிரார்த்திக்கிறேன். அவர் பஞ்சாப் மாநிலத்திற்கு நிறைய நல்லது செய்வார். அவர் சிறந்த முதல்வராக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கெளர்.
இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்தவர்கள். விவாகரத்து கிடைத்தவுடன் மான் அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கெளர் அமெரிக்காவில் வசிக்கிறார். நான் சங்ரூரில் இருக்கிறேன். என்னால் அங்கு போய் தங்க முடியாது. அவராலும் இங்கு வந்து செட்டிலாக முடியாது. எனக்கு எனது குடும்பத்தை விட பஞ்சாப்தான் முக்கியம். அதுதான் எனது குடும்பம். இரு குடும்பத்தில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு. நான் பஞ்சாப் குடும்பத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். கோர்ட் எங்களுக்கு விவாகரத்து கொடுத்துள்ளது. இருவரும் சந்தோஷமாக பிரிகிறோம் என்று கூறியிருந்தார்.
மான் பிரிந்தாலும், மனதுக்குள் அவருக்காக பிரார்த்திபடிதான் இருக்கிறார் கெளர். 2014ல் தனது கணவருக்காக உழைத்தார்.. இன்று தனது முன்னாள் கணவரின் மாபெரும் வெற்றியை தொலை தூரத்திலிருந்து சந்தோஷித்தும், பிரார்த்தனை செய்தபடியும் பார்த்து மகிழ்கிறார் கெளர்… காதல் கதை முடிந்திருக்கலாம்.. ஆனால் புதிய சரித்திரக் கதையின் அத்தியாயம் பஞ்சாப் மண்ணில் முகிழ்த்துள்ளது.. நிச்சயம் கெளருக்கும் அது கெளரவம் சேர்க்கவே செய்யும்.