கீவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் இன்று 21-வது நாளாக நீடித்து வருகிறது.
உக்ரைனை சுற்றியுள்ள எல்லைகளில் இருந்து ரஷிய படைகள் அந்நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. தொடக்கத்தில் உக்ரைனின் ராணுவ நிலைகளை அழிக்க ஏவுகணைகள் வீசப்பட்டன. பின்னர் முக்கிய அணு உலை நிலையங்களை ரஷிய படையினர் கைப்பற்றினர்.
தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் ரஷிய படை தலைநகர் கிவ்வுக்குள் முழு பலத்துடன் செல்ல முடியாமல் திணறி வருகிறது. இதனால் சில நாட்களாகவே கீவ் நகரில் தாக்குதல் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு சரமாரியாக ஏவுகணை, வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
கீவ் நகரை 3 பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்துள்ள ரஷிய படை, பெரும் தாக்குதலை நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு நேற்று 35 மணி நேர ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.
இதற்கிடையே கீவ் நகரில் நள்ளிரவில் ரஷிய படையின் தாக்குதல் தொடர்ந்து நீடித்தது. ஏவுகணை வீச்சு, வான் வழி தாக்குதல் நீடித்தபடியே இருந்தது. இதனால் அங்கு சிக்கியுள்ள மக்கள், பதுங்குக் குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் பதுங்கி இருந்தனர்.
தற்போது குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். இந்தநிலையில் தலைநகர் கீவ்வை ரஷிய படைகள் மிகவும் நெருங்கி உள்ளன.
தற்போது அந்நகரின் புறநகர் பகுதியில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில் கீவ் அருகே உள்ள கிராமங்களில் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதையும், தீப்பற்றி எரிவதையும் காண முடிகிறது.
அதேபோல் கீவ் அருகே உள்ள லிவிவ் நகரில் வான்வழி தாக்குதல்களுக்கான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டபடியே உள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் விலும் ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
மேலும் மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் தாக்குதல் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இதையும் படியுங்கள்… கொரோனாவால் இறந்தவர்கள் எத்தனை பேர்?- மத்திய அரசு தகவல்