40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சாமி சிலைகள் மீட்பு – கோயில் சிவாச்சாரியார் கைது

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் மன்னங்கோயில் கிராமத்திலுள்ள ஸ்ரீ மன்னார்சாமி ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 உலோக சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலிலிருந்து காணாமல் போயின. அந்த சிலைகள் குறித்த தகவல்கள் ஏதும் தெரியாமலே இருந்துவந்தது.

காணாமல் போன சிலைகள் மீட்பு

இந்த நிலையில், மாயமான சிலைகளை கண்டறிந்து, மீட்டுத் தருமாறு ஏனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர் சென்னை சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவில் புகார் மனு அளித்தார்.

அவரின் மனுவை பரிசீலித்த சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி, வழக்கு பதிவு செய்து மேற்படி புலன் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் தமிழ்செல்வன், பாலசந்திரன், சின்னதுரை ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணையைத் தொடங்கினர்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று (15.03.2022 ) சீர்காழி அருகிலுள்ள நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார் சூர்யமூர்த்தி என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் சாமி சிலைகளைத் தான் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, நெம்மேலி விசாலாட்சி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன. அதேபோல, இந்துசமய அறநிலையத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் இல்லாத காத்தாயி அம்மன் வெள்ளி கவசம் – 1, சிறிய வெள்ளி குத்து விளக்கு -2, சிறிய வெள்ளி குடம்-1, சனீஸ்வரன் வெள்ளிக் கவசம் ஆகியவை சாட்சிகள் முன்னிலையில் மீட்கப்பட்டன.

கோயில் சிவாச்சாரியார் கைது

அதைத் தொடர்ந்து, அந்த சிலைகள், பொருள்கள் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக கோயில் குருக்கள் சூர்யமூர்த்தி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குருக்களிடமிருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகளின் மதிப்பு மட்டும் ரூ.2 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.