“மிக மிக விரைவில் தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய சுனாமி வரவிருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகளைக் காணப் போகிறீர்கள்” என்று பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ட்விட்டரில் ஒரு தகவலைத் தட்டி விட்டிருக்கிறார். இதனால் தமிழ்த் திரையுலகமே பீதியில் இருக்கிறது.
இதுபற்றி கோடம்பாக்கம் வட்டாரத்தில் விசாரித்தால், அதிர்ச்சித் தகவல்கள் கொட்டுகின்றன.
“இந்த வருட துவக்கத்தில் பிரபல ஃபைனான்சியர் கம் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது நினைவிருக்கலாம். அந்த ரெய்டில் அவர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தையும் பெட்டி பெட்டியாக ஆவணங்களையும் அள்ளிச் சென்றனர். அதில் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் இருந்து டாப் தயாரிப்பாளர்கள் வரை பலரும் கடன் பெற்றதற்கான ப்ரோ நோட்டுக்கள், கையெழுத்திட்ட ஆவணங்கள், பிளாங்க் செக்குகள் இருந்தனவாம்.

இப்படி சினிமாக்காரர்கள் ப்ரோ நோட்டு கொடுத்து கடன் வாங்கிய தொகை பெரும்பாலும் கணக்கில் வராத கறுப்புப்பணமாம். பல கோடி ரூபாய் அளவுக்கான அந்தத் தொகையைக் கணக்குப் போட்டு இப்போது அதற்கு வரியும் அபராதமும் கட்டச் சொல்லி அந்த ஃபைனான்சியருக்கு நோட்டீஸ் போயிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கடன் கொடுத்த ஃபைனான்சியர் சிக்கலில் மாட்டியது போலவே, கடன் வாங்கிய திரையுலகினரும் இப்போது சிக்கிக்கொண்டுள்ளனர். அந்த ஃபைனான்சியரிடம் கடன் பெற்ற சினிமாக்காரர்கள் பலரும் பிளாக்காவே அதைப் பெற்றிருப்பதால், அவர்கள் அதைக் கணக்கில் கொண்டு வராமல் இருந்திருக்கிறார்கள். அவரிடம் மினிமம் 5 கோடியிலிருந்து அதிகபட்சமாக 100 கோடி ரூபாய் வரை பலரும் கடன் வாங்கியிருக்கிறார்கள். ஃபைனான்சியரிடம் இதற்காக அவர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த டாக்குமென்ட்கள் இப்போது வருமான வரித் துறையில் இருப்பதால், லிஸ்ட்டில் இருக்கும் பிரபலங்களுக்கு கடந்த ஒன்றரை மாதமாகவே நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றனவாம். கடன் வாங்கிய பணத்தை கணக்கில் காட்டாமல் மறைத்ததற்கு அபராதமும், அந்தத் தொகைக்கான வரியையும் சேர்த்துக் கட்டச் சொல்லி நோட்டீஸ்கள் வருகின்றனவாம்.
ஏற்கெனவே ஃபைனான்சியரிடம் வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் வட்டியை மட்டும் கட்டும் பலரும் இந்த திடீர் நோட்டீஸால் திக்குமுக்காடிப் போயுள்ளனர். வாங்கிய கடனைக் கட்டுவது ஒருபுறமிருக்க, அதற்காக வரியும் அபராதமும் கட்டுவது என்றால் எங்கே போவது என்று தெரியாமல் அவர்கள் தவிக்கின்றனர். சிலருக்கு இதன் விபரீதம் இன்னமும் புரியாமல் இருக்கின்றனர்” என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற சிலர், கடன் கொடுத்தவரிடமே அதைக் காட்டி, தஞ்சம் அடைந்துள்ளனராம். அவர்களிடம் அவரும் “எல்லாம் மேல இருக்கறவன் பாத்துக்குவான்” என்கிற ரேஞ்ச்சில் ஆறுதல் சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்கள்.
ஆக, அந்தத் தயாரிப்பாளர் சொன்ன சுனாமி விரைவில் வெடிக்கும் என்கிறார்கள் ஆணித்தரமாக!