கெஸ்பேவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றைய தினம் உரிமையாளர் மற்றும் ஊழியருக்கும், நுகர்வோர் பலருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
டீசல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து எரிபொருள் கொள்வனவிற்காக வந்திருந்தவர்களுக்கும் உரிமையாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் குறித்த விடயத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் தலையிட்டதால், அந்த நபருக்கும் நுகர்வோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின்னர் கிளர்ச்சியடைந்த நுகர்வோர் பலரால் ஊழியர் தாக்கப்பட்டுள்ளார், மோதலை கட்டுப்படுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதேவேளை இன்றைய தினமும் கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்தவர்களுக்குள் குழப்பம் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து பொலிஸார் அங்கு வந்து நிலைமையை சுமூகமாக்கியிருந்ததுடன், தொடர்ந்து பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மண்ணெண்ணெய் ஒரு சில எரிபொருள் நிலையங்களிலேயே கிடைப்பதால் குறித்த எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்து கொள்வதாக சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் நாட்டில் இந்த நிலை தொடருமானால் மக்கள் மேலும் கோவமடைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.