கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவையில் மாநில முதல்வரும், திரிணாமுல் கட்சி தலைவருமான மம்தா பேசுகையில், ‘4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்ற போதும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது எளிதாக இருக்காது. நாடு முழுவதும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் கீழானவர்களின் ஆதரவே பாஜகவுக்கு உள்ளது. சமாஜ்வாதி கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எனவே அரசியலில் பாஜகவின் கை ஓங்கிவிட்டதாக கருத முடியாது. தேர்தல் களத்தில் இன்னும் ஆட்டம் மீதி உள்ளது’ என்றார். வரும் ஜூலை மாதம் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில் மம்தாவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.