சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸையும் மற்ற மாநிலங்களில் வென்ற பா.ஜ.க-வையும் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பக்வந்த் மான் முதல்வராக பொறுப்பேற்றார். இதன் வெற்றியின் மூலமாக ஆம் ஆத்மி ராஜ்ய சபா இடங்களை உறுதி செய்திருக்கிறது. பஞ்சாபின் 17 ஆவது முதல்வராக பக்வந்த் மான் பொறுப்பேற்ற பின் அந்தத் தேர்வு பட்டியலில் ஹர்பஜனின் பெயர் அடிப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஜலந்தரில் அமையவிருக்கும் புதிய விளையாட்டு பல்கலைக்கழகம் ஹர்பஜன் சிங் பொறுப்பில் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. பஞ்சாபின் முதல்வர் பக்வந்த் மான் தேர்தலில் போட்டியிடும் போது ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி ஆட்சியில் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற அரசல்புரசலான தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. 41 வயதான ஹர்பஜன் சிங் விளையாட்டில் இருந்து ஓய்வு எடுக்கும் முன்னர் காங்கிரஸின் நவஜோத் சிங் சித்துவைச் சந்தித்தார். இருவரும் முன்னர் 1998-ல் ஒன்றாகக் களத்தில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும் டெல்லி யூனியன் பிரதேசம் என்ற அளவிலே மாநில ஆட்சியின் எல்லைகள் இருக்கும். அப்படிப் பார்த்தால் முழுமையாக ஒரு மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது பஞ்சாபில்தான். ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு மார்ச் 10-ம் தேதி ஹர்பஜன் சிங் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு உறுதியானால் கிரிக்கெட்டராக இருந்து ராஜ்ய சபாவுக்குப் போனவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரைப் போலவே ஹர்பஜனும் இடம்பெறுவார்.