ஆயுதங்களை கீழே போடும்படி உக்ரைன் அதிபர் கூறும் வீடியோ – உண்மையா? #FactCheck

உக்ரைன் மக்களிடம் ஆயுதங்களை கீழே போட்டு விடுமாறு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறுவது போல ஃபேஸ்புக்கில் வெளியான வீடியோ உண்மையானது அல்ல எனத் தெரியவந்துள்ளது.
image
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுவரை உக்ரைனின் முக்கிய நகரங்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய படைகள், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக அந்நாட்டை சுற்றிவளைத்து ஏறக்குறைய அனைத்து பகுதிகள் மீதும் குண்டு மழையை பொழிந்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு தலைவர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துவிட்டதால் அங்கு சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளின் இந்த தொடர் தாக்குதலால் உக்ரைன் பெருமளவிலான பொருள் சேதத்தையும், உயிர் சேதத்தையும் சந்தித்து வருகிறது.
இதனிடையே, இன்று காலை முதலாக ஃபேஸ்புக்கில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசிய ஒரு வீடியோ வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் பேசும் செலன்ஸ்கி, “ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் பெரிய விலையை கொடுத்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே, ரஷ்ய படையினருடன் சண்டையிடுவதை கைவிட்டு, தங்களிடம் உள்ள ஆயுதங்களை உக்ரைன் மக்கள் கீழே போட்டு விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
image
இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே, இது போலியான ஒன்று என இணையதள பயன்பாட்டாளர் கண்டுபிடித்துவிட்டனர். அந்த வீடியோவில் செலன்ஸ்கியின் முகத்துக்கும், அவரது கழுத்துக்கும் இடையேயான நிற வேறுபாடு, அவரது உச்சரிப்பில் காணப்பட்ட வித்தியாசம் உள்ளிட்ட பல விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, இந்த வீடியோவை ஆய்வு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அந்த வீடியோ போலியானது எனக் கூறி அதை நீக்கியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.