தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனை செய்வதற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணம் 400 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் வராத பயனாளிகளுக்கு 700 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் குழு மாதிரிகளுக்கான கட்டணம் 150 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் பரிசோதனைகளை தொடரவும், தடுப்பூசி இயக்கத்தை தொடர்ந்து நடத்தவும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.