
ஆல் கிளீயர்: நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு உச்சநீதி மன்றம் கிரீன் சிக்னல்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நாசர் தலைமையில் ஒரு அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தல் செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்த தடை விதிக்கப்பட்டது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து துணை நடிகர் ஏழுமலை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இறுதியாக தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தல் செல்லும் என்று கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.