அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அரசியலில் மும்முரமாக இறங்குவார் என எதிர்பார்ப்பதில்லை, ஓய்வு அறிவித்து ஒதுங்கி இருந்தார். ஆனால், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என அடுத்தடுத்து அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
இதனால் ஒற்றை தலைமை வேண்டுமென அதிமுகவில் மீண்டும் குரல் எழுந்துள்ளது. மேலும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனவும் குரல் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் சசிகலா, டெல்லி மேலிடத்தில் தயவுடன் கட்சிக்குள் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளார். தற்போது தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள், அதிருப்தி தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆதரவாளர் சந்தித்து பேசினேன்.
இந்நிலையில், சென்னையில் இருந்து சசிகலா கார் மூலம் இன்று தஞ்சாவூர் புறப்பட்டார். வழியில் மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோவில், மயிலம் முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். அப்போது அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
சசிகலா தஞ்சாவூரில் இரண்டு நாட்கள் தங்க முடிவு செய்து உள்ளார். அந்த பயணத்தின் போது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஒரத்தநாடு எம்எல்ஏவுமான வைத்திலிங்கத்தை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.