புதுடெல்லி:
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.
மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது.
இலங்கைக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டி வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டிருந்தது. இதற்காக இலங்கை நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே இந்தியா வந்தார். டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,580 கோடி) கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்தியா ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி வழங்குகிறது.