உக்ரைனில் 22வது நாளாக போர் நீடித்துவரும் நிலையில், உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் விரைவில் சுமுக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷியாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 22 நாட்களாக உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், பொதுமக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.
தங்கள் நாட்டில் ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரியும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இது தொடர்பாக நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இது உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என்று அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான அமைதி ஒப்பந்தம் தயாராகி வருகிறது. போர் நிறுத்தம் மற்றும் படைகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை இதில் முக்கிய அம்சங்களாக இடம் பெற உள்ளன. நேட்டோ படைகளுடன் இணையும் திட்டமில்லை என்று உக்ரைன் அரசு தெளிவுபடுத்தி ரஷ்யாவின் சில நிபந்தனைகளையும் ஏற்க முன் வந்திருப்பதால் சமரச முயற்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காணொலி வாயிலாக ரஷ்யா உக்ரைன் இடையே நீடித்த பேச்சுவார்த்தைகளின் மூலமும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.