ரஷ்ய தாக்குதலுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து உக்ரைன் தலைநகருக்கு நேரில் சென்று ஆதரவளித்துள்ளனர் ஐரோப்பிய நாடுகளின் மூன்று பிரதமர்கள்.
உக்ரைன் நாட்டை கைப்பற்றும் நோக்கில் 21 நாட்களாக ரஷ்யா கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த நிலையில், போலந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் செவ்வாய்க்கிழமை மாலை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளனர்.
இதனையடுத்து, உக்ரேனிய மக்களே நீங்கள் தனித்தல்ல என செக் குடியரசு பிரதமர் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஊடுருவலுக்கு பின்னர் உக்ரைனுக்குச் செல்லும் முதல் மேற்கத்தியத் தலைவர்கள் இவர்கள்தான்.
தொடர்ந்து பேசிய செக் குடியரசு பிரதமர் Petr Fiala, உங்கள் துணிச்சலான போராட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
நீங்கள் எங்களுக்காகவும் போராடுகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
நீங்கள் தனியாக இல்லை, எங்கள் நாடுகள் உங்கள் பக்கம் நிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உங்கள் வருகை உக்ரைனுக்கான ஆதரவின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும் என தெரிவித்துள்ளார்.
போலந்தில் இருந்து இரயில் மூலம் புறப்பட்டு சென்ற மூன்று பிரதமர்களும் புதன்கிழமை பகல் போலந்துக்கு திரும்பியுள்ளதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை மாலை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மூன்று பிரதமர்களும் பேச்சுவார்த்தையின் போது, தலைநகர் கீவ்வின் மேற்கு விளிம்பில் குண்டுவீச்சு சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் மூவரும் தனிப்பட்ட முயற்சியாலையே உக்ரைன் சென்றுள்ளதாகவும், இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தெரியும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.