மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குலை நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை ஏற்க முடியாது என ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிவித்து உள்ளது.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் நேட்டோ படையினரும் உக்ரைனை கைவிட்டுவிட்டதால், உக்ரைன் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அங்கிருந்து பல லட்சம்பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். போர் இன்று 22வது நாளாக தொடர்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில் சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் கொடுத்த புகாரின் பேரில், நேற்று விசாரணை நடைபெற்றது. அதையடுத்து, ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் போர் முடிவுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால், ரஷ்யாவோ, நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தமுடியாது என ரஷியா அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இந்த போர் தொடர்பாக ரஷ்யாவிடம் இருந்து எந்த சம்மதமும் பெறப்படவில்லை என்று கூறிய கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த முடிவை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார்.