உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டும், ரஷ்யா அதை நிராகரித்து ஏவுகணை தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை தீர்க்க முன்வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவருகிறது.
இது தொடர்பாக பிரதமர் மோடி, “போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடன் பொருளாதார ரீதியாக, பாதுகாப்பு ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளது. இந்தியாவின் பல தேவைகள் இந்த நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த போரானது உலகின் அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று இந்திய நம்புகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைப் பற்றி பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் செய்தியாளர்களிடம் கூறும் போது, “உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம்.
ஆனாலும், நாங்கள் இந்திய வர்த்தகத்துடன் தொடர்ந்து பயணிக்கிறோம். இங்கிலாந்தின் முக்கிய வர்த்தக பங்காளியாக இந்தியாவும் உள்ளது. தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். எதிர்காலத்தில் உக்ரைனுக்கு எதிரான இந்த போருக்கு ரஷ்யாவால் சரியான நிதியளிக்க முடியாது என்பதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.